தமிழ் மொழி ஆய்வகத் திறப்பு விழா

தேதி: 06.01.2025 நாள்: திங்கட்கிழமை


தமிழன்னை தடம் பதித்த தமிழ் திருநாடாம் நகரியில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி வளாகத்தில் தமிழ் மொழிக்கு என்று ஆய்வகத் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு உயர் திரு. வைரமுத்து ஐயா அவர்களின் புதல்வரும் பாடலாசிரியரும் மொழி ஆராய்ச்சி நிபுணருமான உயர்திரு. மதன் கார்க்கி அவர்களும் அவர்களின் மனைவி மற்றும் மெல்லினம் கல்வி நிறுவனர் திருமதி. நந்தினி கார்க்கி அவர்களும் மேதகு திரு. பங்கஜ் காலோட் SILVER ZONE தலைமை செயல்பாட்டு அதிகாரி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விழாவினைச் சிறப்பித்தனர்.

இவ்விழாவின் தொடக்கமாக விருந்தினருக்கு பாரம்பரிய இசைக் கருவிகள் கொண்டு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரதியார், கம்பர், திருவள்ளுவர், பாரதிதாசன், மீனாட்சி, மூவேந்தர்கள் போன்று வேடமணிந்த மழலைகள் மாறு வேடங்களில் விருந்தினர்களை வரவேற்று மகிழ்வித்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் மொழி ஆய்வகம் திரு. மதன் கார்க்கி மற்றும் நந்தினி கார்க்கி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கல்வி நிறுவனத் தலைவர் திரு. செந்தில் குமார் மற்றும் திருமதி கண்மணி செந்தில் குமார் தாளாளர் திரு. குமரேஷ் முன்னிலையில் ஆய்வகம் திறந்து அனைத்து கல்விக் குழும ஆசிரியர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் கார்க்கி தமிழ்க் கழகம் சார்பில் பயிற்சிப் பட்டறை வல்லுனர்களால் தேவையானப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்த்தாயின் வாழ்த்துகளுடன் குழுப்பாடல், குழு நடனம், கவிதை வாசிப்பு, விருந்தினர் சிறப்புரை, கல்விக் குழும தலைவர்கள் சிறப்புரை என விழா கலை கட்டியது. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்டு மனம் நெகிழ்ந்தனர்.

சிறப்பு உரையாக திரு மதன் கார்க்கி அவர்கள், மொழியின் இன்றியமையாமை குறித்தும் மொழியின் பண்பாட்டுக் கூறுகள் பற்றியும் வருங்கால தலைமுறையினருக்கு மொழியைப் பாடமாக்கி கற்பதால் ஏற்படும் வளர்ச்சிகள் பற்றியும், மொழி சார்ந்த பல்வேறு துறைகள் பற்றியும், மொழியின் பரவலான அமைப்பு பற்றியும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறி ஊக்கப்படுத்தினார். மேலும் மெருகூட்ட திருமதி. நந்தினி கார்க்கி அவர்கள் நம்மை வேற்றுமையில் ஒற்றுமைப்படுத்த மொழி ஒன்றே போதுமானது என்று கூறி அனைவரின் மனதிலும் வேர் ஊன்றினார்.

விழாவில் நடு நாயகமாக தமிழில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்த அனைத்துக் கல்வி குழுமப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ கண்மணிகளுக்கு விருதுடன் கூடிய சான்றுகளை விழாவின் நாயகன் திரு. மதன் கார்க்கி, நாயகி நந்தினி கார்க்கி அவர்கள் வழங்கிச் சிறப்பித்தனர்.

தமிழ் தேர்வு மட்டுமின்றி தமிழ் சார்ந்த அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவக் கண்மணிகளுக்கு OVERALL ACHIEVER என்ற பிரிவில் வெற்றி தமிழ் விருது வழங்கி கௌரவித்தனர்.

தமிழை வாழ்க்கையாக்கி, வளம் பெருக்கும் அனைத்துத் தமிழ் ஆசிரியர்களுக்கும் கார்க்கி தமிழ் கழகம் சார்பில் விருந்தளித்து கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியாக முதல்வர் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. மாணவச் செல்வங்களின் மழலை கவிதைகளாலும், பண்பாட்டு, கலை சார்ந்த கண்கவர் காட்சிகளாலும் விருந்தினர் உள்ளம் மட்டுமின்றி கல்வி எங்கும் தமிழ் மணம் கமழ்ந்தது.